தீண்டாதார் துன்பம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.02.1932 

Rate this item
(0 votes)

வெள்ளைக் காரர்களைப் பார்த்து “நீங்கள் எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்க வில்லை: ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள், நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்ளுவோம்” என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்கின்றனர்; இன்னும் சத்தியாக் கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை. 

இது ஒரு புறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதீக இந்துக்கள் எதிர்த்துத் துன்பப்படுத்துதலும் ஒரு புறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும், நாகரீகமாகவும் சௌகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அநீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்கு தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாத வர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இது போலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங் களிருந்து வருகின்றன. ஆனால் அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர் ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த்திருப்பதாலும், பெரும்பாலானவர்கள் கல்வி அறிவும் உலக நாகரீக உணர்ச்சியும் இல்லாமையால் “தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டாதவராகவே கஷ்டப்படும்படி படைத்தான். எல்லாம் தமது தலை விதியின் படி நடக்கும்” என்ற நம்பிக்கையுடையவர்களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 

இப்படியில்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்றுத் தங்களைச் சீர்திருத்தம் செய்து கொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கிப் பழைய சாக்கடை யிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா ராசிபுரம் தாலூக்கா, தாத்தைய்யங்கார் பட்டி கிராமத்திலிருக்கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்றமடையாதபடி அடக்கி வைக்க உயர் ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்டருக்கும். போலீஸ் சூப்பரின் டெண்டுக்கும் செய்து கொண்டிருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றனர். 

"எங்களூர்க் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாய் இருப்பதற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப்படுத்து கிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம்” என்று சொல்லு கிறார்கள். 

நிபந்தனைகள்: 

  1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது 
  2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது. படிக்கவும் கூடாது, 

3.வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டி யிலிருந் தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும். 

4.பெண்கள் மார் ஆடை போடக்கூடாது; மீறி மார் ஆடைப் போட் டால் மாரை அறுத்துவிடுவது. 

5.நாகரிகமான நகைகள் போடக் கூடாது. 

  1. குடைகள் பிடிக்கவும் கூடாது; குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விடவேண்டும். 

7.பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது. 

 

என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம். இந்தக் கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கின்றோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களிளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்தத் தேசியவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர்கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்தரமின்றி அந்நிய நாட்டினர்க்கு அடிமையாக இருக்கும் இக்காலத்திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார்களாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள். 

இம் மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதை பொருட்படுத்தாத ஒரு தேசீயம். அல்லது ராஜீயம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் பதிய வைத்திருப்பதற்கு காரணம், பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ ? ஆகையால் இந்தப் பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒருக்காலும் முடியாது. ஆகவே இனியும் தீண்டாத வர்கள் கடவுளையோ மதத்தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்ற மடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சிச் செய்வதன் மூலமும், வைதீகர்களாகிய அரசியல் கிளர்ச்சிகாரர்கள் எல்லாம் “சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறும் வார்த் தைக்கு ஏமாறாமல் முயற்சி செய்வதன் மூலமும் தான், தாங்கள் விடுதலை பெற்று மனிதர்களாக வாழ முடியுமென்று எச்சரிக்கின்றோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.02.1932

 
Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.